குற்றம்

வீட்டில் அடைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞரை தேடுது போலீஸ்!

வீட்டில் அடைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞரை தேடுது போலீஸ்!

webteam

குடும்ப வறுமையை பயன்படுத்தி 16 வயது சிறுமியை ஏமாற்றி, பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே குருசடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 16 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக, ’சைல்டு ஹெல்ப்லைனு’க்கு தகவல் வந்தது. அதன் பேரில் சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு அதிகாரி ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்றனர். அது பள்ளம் துறையை சேர்ந்த ராபர்ட் பெல்லார்மின் (41) என்பவர் வீடு. உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டில் சிறுமி சிறை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து அவரை அதிகாரிகள் மீட்டனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கடன் தொல்லைகளில் இருந்து காப்பாற்றுவதாக சிறுமியின் பெற்றோரிடம் சொல்லி, அவரை அழைத்து வந்துள்ளார் பெல்லார்மின். பின்னர் திருசெந்தூரில் ஒரு வழிபாட்டு தளத்தில் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை இங்கு தங்க வைத்துள்ளார். 

இதுபற்றி அந்தச் சிறுமி, பணம் தருவதாக தன்னையும் குடும்பத்தையும் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமுலத்தின் அடிப்படையில்  பெல்லார்மின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரை தேடிவருகின்றனர் .