குற்றம்

14 ஆண்டுகளாக தேடப்பட்ட ரவுடி கைது : பின்னணி என்ன ?

webteam

தமிழகம் முழுவதும் 14 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரவுடி குமார் என்பவர் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் தாமரைக்குளம் தென்கரை பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குமார் என்ற ரவுடியை தேடி வந்தனர். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குமாரை, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் குமார் பதுங்கி இருப்பதாக சேலம் ஒருங்கிணைந்த நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சங்ககிரிக்கு சென்ற போலீஸார் அங்கு கண்காணித்து வந்தனர். பின்னர் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுதொடர்பாக சேலம் போலீசார் நாகை மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களை வரவழைத்து குமாரை ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தை சேர்ந்த குமார் (37), கடந்த 2002ஆம் ஆண்டு அரசியல் கட்சி மாநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பும் போது ஏற்பட்ட மோதலில் இரட்டை கொலை வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் கடலூர் சிறையில் இருந்தபோது பல ரவுடிகளுடன் குமாருக்கு தொடர்பு ஏற்பட்டதுள்ளது. பிறகு ஜாமீனில் வந்த குமார் தலைமறைவாகி இருந்த நிலையில், பல்வேறு பகுதியில் காவல்துறையினர் தேடி வந்தனர்.