குற்றம்

முன்னெச்சரிக்கையாக தடுக்கப்பட்ட கொலை சம்பவம்! ஆயுதங்களுடன் 10 சிறார் உட்பட 14 பேர் கைது

நிவேதா ஜெகராஜா

போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் நடக்கவிருந்த கொலை சம்பவம் தடுக்கப்பட்டு 14 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள 14 நபர்களில் 10 பேர் பள்ளி படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ம் ஆண்டு ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விக்கி என்கிற கஞ்சி விக்கி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பழிக்கு பழி வாங்குவதற்காக 14 நபர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தமிழ்நாடு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

நேற்று இரவு அக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவரை கொலை செய்வதற்காக 14 நபர்களும் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்தபோது திருவல்லிக்கேணி போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, இரண்டு கத்தி, ஒரு வீச்சரிவாள், ஒரு கடப்பாரை ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். குறி வைத்த நபர் திருவல்லிக்கேணி பகுதிக்கு நேற்று வர இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 14 நபர்களும் திட்டம்போட்டு கொலை செய்வதற்காக தமிழ்நாடு லாட்ஜில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் (25), பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த பரத்குமார் (20), சாய்காந்த் (19) உள்ளிட்ட நபர்களுடன் பள்ளி படிக்கும் மாணவர்கள் உட்பட 14 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- செய்தியாளர்: சுப்பிரமணியன்