நாங்குநேரி
நாங்குநேரி PT
குற்றம்

12ம் வகுப்பு மாணவரை வீடுபுகுந்து அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள்; நாங்குநேரியில் கொடூர சம்பவம்!

webteam

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் மகன் (17) பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் (14) ஒன்பதாம் வகுப்பும் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர் ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஒருவாரம் ஆன நிலையில் பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோரிடம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாங்குநேரி அரிவாள் வெட்டு

அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாணவரிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பள்ளியில் தன்னை சிலர் அடிப்பதாக கூறிய அவர், சக மாணவர்கள் குறித்த விபரத்தையும் கூறியுள்ளார். ’ஏன் தங்களை குறித்து ஆசிரியர்களிடம் சொன்னாய்’ என அவரிடம் அந்த மாணவர்கள் பள்ளி முடிந்த பின்பு சண்டைபோட்டு மிரட்டியுள்ளனர்.

வீடுபுகுந்து வெட்டிய கும்பல்!

இந்நிலையில், கடந்த 9ம் தேதி சுமார் 10.30 மணிக்கு வீட்டில் இருந்த அந்த மாணவரை மூன்று பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போது அதை தடுக்க முயன்ற தங்கைக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனையடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியால் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

நாங்குநேரி அரிவாள் வெட்டு

வீடு புகுந்து வெட்டியும் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாங்குநேரி டிஎஸ்பி ராஜு தலைமையில் போலீசார் பொதுமக்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்ததை ஏற்று கிருஷ்ணனின் உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சாதரணமாக தொடங்கிய விசாரணையில் திருப்பம்!

முதலில் ஏதாவது சாதாரண பிரச்னையாக இருக்கும் என்று தொடங்கப்பட்ட விசாரணையில், மாணவர்களுக்கு இடையே சாதிய ரீதியிலான மோதல் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவருக்கும், மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் திமுக ஒன்றிய செயலாளர் உறவினர் மற்றும் சக மாணவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

நாங்குநேரி அரிவாள் வெட்டு

வழக்கின் பேரில் நாங்குநேரி டிஎஸ்பி ராஜு விசாரணை நடத்தி மாணவருடன் பள்ளியில் படித்து வந்த 17 வயதுடைய 12ம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் இரண்டு சிறார் உட்பட ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அதில் ஒரு சிறுவன் நாங்குநேரி திமுக ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணுவின் உடன் பிறந்த சகோதரரின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை பதிவிட்டுள்ளார். அதில், ”தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன் சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்று அவர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இப்படியொரு கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.