செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நாகை வழியாக கடத்தப்படுவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் வேம்பரசி தலைமையில் போலீசார் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி நோக்கி வேகமாக வந்த வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சாக்கு மூட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் 10 லட்சம் மதிப்பிலான 92 மூட்டைகளில் 1,280 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் முப்பயத்தங்குடியைச் சேர்ந்த அந்தோணிராஜ், விழிதியூரைச் சேர்ந்த ராஜ்குமார், நிரவியை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் பெங்களூரில் இருந்து குறைந்த விலைக்கு புகையிலை பொருட்களை வாங்கி வந்து நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்கள் மற்றும் மினிலோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.