குற்றம்

காதலிப்பதை நிறுத்தியதால் தாக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சோக முடிவு! இளைஞர் கைது

காதலிப்பதை நிறுத்தியதால் தாக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சோக முடிவு! இளைஞர் கைது

webteam

திருவாரூர் அருகே காதலிக்க மறுத்ததால் பொது இடத்தில் தாக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அதற்கு காரணமான இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் அருகே விலாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்த தீன தயாளன் (18) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி, தீனதயாளனிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த தீனதயாளன், மாணவியை சாலையில் வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த மாணவியின் தாயார் தீனதயாளன் வீட்டிற்கு சென்று முறையிட்டுள்ளார். பொது இடத்தில் தீனதயாளனால் தாக்கப்பட்ட சம்பவத்தில் மனமுடைந்து இருந்துவந்த மாணவி, வீட்டில் யாருமில்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தாலுக்கா போலீசார் தீனதயாளன் மீது போக்சோ வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.