செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
பெங்களூரு ரூரல் ஆனேக்கல் அருகே கர்பூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பின், முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, ஆனேக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். போலீஸ் வருவதை கவனித்து ஒரு வீட்டில் இருந்த நான்கு இளைஞர்கள், முதல் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில், மூன்று பேர் தப்பிய நிலையில், ஒருவர் மட்டும் கால் எலும்பு முறிந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர்கள் வசித்த வீட்டிற்குள் சென்ற போலீசார், சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு அறையில் பெரிய மூட்டைக்குள் பொட்டலம், பொட்டலமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரித்தபோது, அவர் கேரளாவைச் சேர்ந்த சச்சின் (28) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள் ராஷி, சஞ்சு, உமேத் என்பதும் தெரியவந்தது.
தோடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஒடிசா உட்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து, குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து, அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கிவைத்து கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கால் முறிந்ததால் சச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.