குற்றம்

கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் - தேனி நீதிமன்றம் தீர்ப்பு

webteam

கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2017-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட சுருளிப்பட்டியைச் சேர்ந்த காராமணி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளார். இதை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை என்பவர் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்துமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காராமணி கீழே தள்ளி விட்டதில் அய்யாதுரை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று இறுதி விசாரணை முடிவுற்ற நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளி காராமணி என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் மெய்க்காவல் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி காராமணியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.