குற்றம்

”PAN அப்டேட் பண்ணனும்.. OTP வரும்..” - மென்பொறியாளரிடம் 10 லட்சம் சுருட்டிய மர்ம ஆசாமி!

webteam

பான் கார்டு புதுப்பித்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு அமெரிக்காவில் பணியாற்றும் மென்பொறியாளர் வங்கி கணக்கில் இருந்து 10 லட்சம் சுருட்டிய வழக்கில் சென்னை விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பத்ரி நாராயணன் (45). அமெரிக்காவில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் பத்ரி நாராயணன் குடும்பத்துடன் சென்னை வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்ற பத்ரி நாராயணன் ரகசிய குறியீட்டு எண்ணை 2 முறை தவறாக பதிவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவரது ஏ.டி.எம் கார்டு பிளாக் செய்யப்பட்டது.

சிறிது நேரத்தில் பத்ரி நாராயணன் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அப்போது பேசிய மர்ம நபர் " பான் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்" என்று கூறி பத்ரி நாராயணனின் ஏடிஎம் கார்டு எண்ணை கேட்டு பெற்றிருக்கிறார். மேலும் அவரது செல்போனுக்கு "லிங்க்" ஒன்றையும் அனுப்பி வைத்ததால் இதை உண்மை என்று நம்பிய பத்ரி நாராயணன் அதை பயன்படுத்திய சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 3 தவணைகளாக ரூ10 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்திருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பத்ரி நாராயணன் வங்கி கிளைக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் நூதனமான முறையில் கைவரிசை காட்டி பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசில் புகாரளிக்கவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.