செய்தியாளர்: எழில்
ஆவடி காவல் ஆணையருக்கு உட்பட்ட செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் வந்த நபர் ஒருவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 2 பண்டல்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை செங்குன்றம் மதுவிலக்குப் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டத்தைச சேர்ந்த விக்னேஷ் (29) என்பதும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சூலூர்பேட்டை வரை வந்து அங்கிருந்து பேருந்து மார்க்கமாக சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலீசார், விக்னேஷ் என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.