குற்றம்

சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள் - ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

நிவேதா ஜெகராஜா

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றியது மற்றும் பகிர்ந்தது தொடர்பான புகார்கள் அதிகம் எழுந்து வந்தநிலையில், நாடு முழுவதும் 77 இடங்களில் சிபிஐ நடத்திய சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவில் வீடு ஒன்றில் சோதனையிட சென்ற சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான், கனடா, வங்கதேசம், நைஜீரியா, இந்தோனேசியா, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 சமூகவலைத்தள குழுக்கள் மூலம் 5,000க்கும் மேற்பட்டோர் சிறுவர்களின் ஆபாச படங்களை பகிர்ந்து வருவதும், அந்தக் குற்றச்செயல்கள் இந்தியாவிலும் நிகழ்வதையும் சிபிஐ சமீபத்தில் உறுதிசெய்திருந்தது. அதைத்தொடர்ந்த குழந்தைகள் தினமான கடந்த நவம்பர் 14 ஆம் தேதி இதில் சம்பந்தப்பட்ட 83 பேர் மீது, 23 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ. இதையடுத்து நாடு முழுவதும் நேற்று 77 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகத்தை பொறுத்தவரை திருவள்ளூர், கோவை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை ஆகிய 5 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. பிற மாநிலங்களைவிடவும் ஒடிசாவில் குழந்தைகள், சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதோடு, பல்வேறு சமூகவலைத்தளங்களிலும் பகிரப்படுவதாக அதிகமாக புகார் எழுந்து வந்தது. ஆகவே அங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்படது. அப்போது ஒடிசா மாநிலம், தேன்கனால் பகுதியில் வீடு ஒன்றில் சோதனை நடத்தச் சென்ற சிபிஐ அதிகாரிகளை, உள்ளூர் மக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதுமான இந்த சோதனையின் போது, சில தனிநபர்கள் குழந்தைகள் ஆபாச பட விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.