குற்றம்

“பங்களா உள்ளேயிருக்கும் யாராவதுதான் மின்சாரத்தை துண்டித்திருப்பர்”- ஜெ. ஓட்டுநர் பேட்டி

“பங்களா உள்ளேயிருக்கும் யாராவதுதான் மின்சாரத்தை துண்டித்திருப்பர்”- ஜெ. ஓட்டுநர் பேட்டி

நிவேதா ஜெகராஜா

“கோடநாடு பங்களா உள்ளே இருக்ககூடிய யாரோ ஒருவர்தான் பகீர்மான கோபுரத்தில் இருந்து எஸ்டேட்டிற்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்திருக்க வேண்டும் அல்லது கொலை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு யாராவது வழிகாட்டியிருந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது” என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் வாகன ஓட்டுநர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் திவாகரன் இதுபற்றி விரிவாக தெரிவிக்கையில், “கோடநாடு எஸ்டேட்க்கு நாள் ஒன்றுக்கு 33/11 கிலோ வாட் மின்சாரம் செல்கின்றது. அதில் கோத்தகிரி துணை மின் நிலையத்தில் இருந்து 17 கிலோ புதைக்கப்பட்ட மின்சார கேபிள் வழியாக மின்சாரம் செல்கின்றது. இங்கிருந்து செல்லும் மின்சாரம் கோடநாடு பங்களா வளாகம் உள்ளே இருக்கும் கோபுரத்துக்கு செல்கின்றது. ஆகையால் பங்களா உள்ளே இருக்ககூடிய யாரோ ஒருவர்தான் மின்சாரத்தை துண்டித்திருக்க வேண்டும், அல்லது கொலை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு யாராவது வழிகாட்டியிருந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதேநேரம் ‘கோடநாடு எஸ்டேட்டிற்கு எந்தச் சூழலிலும் மின்தடை எப்போதும் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்ற முக்கியமான நோக்கத்தில்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலேயே கோத்தகிரியில் இருந்து 17 கிலோ மீட்டர் வரை நிலத்திற்கடியில் மின்ஒயர்கள் பொறுத்தப்பட்டன. அந்தவகையில் இதுவரை எந்தச் சூழலிலும் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதில்லை. பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது மட்டுமே துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இதை முன்வைத்து, ‘வெளியில் இருந்து உள்ளே வந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்தார்களா? அல்லது உள்ளேயே சம்பவம் நடைபெறும் குறித்த நேரத்தில் மின் இணைப்பு யாரனும் வழிகாட்டுதல் பேரில் துண்டிக்கப்பட்டதா?’ என்பது குறித்து காவல்துறையினர் முழு விசாரணை மேற்கொள்ளவேண்டும்” என்றார் அவர்.

கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறிய போது மின்சார வாரியத்தின் சார்பாக மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்று உறுதியாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து அப்போது மின்வாரிய செயற் பொறியாளராக பணியாற்றிய தண்டபாணியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “கோடநாட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது மின் விநியோகம் சீராகதான் இருந்தது” என்று கூறினார். இவரிடமும் விரைவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.