குற்றம்

பொறியாளராக அல்ல.. ஆசிரியராக விரும்புகிறேன் - மனதை உருக்கும் தற்கொலை கடிதம்

பொறியாளராக அல்ல.. ஆசிரியராக விரும்புகிறேன் - மனதை உருக்கும் தற்கொலை கடிதம்

webteam

நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களுள் மிகவும் பிரசித்தி பெற்றதும், மாணவர்கள் சேர விரும்புவதும் ஐஐடி எனப்படும் இந்திய கல்வி நிறுவனங்கள். இதன் பிரிவான கவுகாத்தியில் உள்ளது. அங்கு கர்நாடகாவை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர் மெக்கானிகல் என்ஜினியரிங் பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டு தகொலை செய்து கொண்டார்

வழக்கமாக மாணவிகள் அனைவரும் வகுப்புக்கு சென்ற பின், சோதனை செய்வதற்காக வந்த பாதுகாவலர், ஜன்னல் வழியே பார்த்த போதுதான் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த தகவல் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு, பெற்றோருக்கும் கூறப்பட்டது. இந்நிலையில் மாணவியின் அறைகளில் சோதனை நடத்திய போலீசார், தற்கொலை கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர்

மாணவியின் அந்த கடிதத்தில் “ என்னால் எனது பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் நல்ல மதிப்பெண் பெற்றதால் ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எனது உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். எனக்கும் அது பெரிய விஷயமாகவே பட்டது. ஆனால் நான் விரும்பியது பொறியியலை அல்ல. இதை யாரிடம் சொல்வது. எனது பெற்றோரின் கனவு கலைந்து விடாதா ? நல்ல ஆசிரியராவதே எனது விருப்பம். பொறியியல் எனக்கு விருப்பமல்ல” என எழுதப்பட்டிருந்தது. 

சம்பவம் குறித்து பேசிய கல்வி நிறுவன செய்தித் தொடர்பாளர் “உயிரிழந்த அன்று காலை மாணவி தனது அறை தோழியிடம் பேசியிருக்கிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை, வகுப்புக்கு வர இயலாது எனவும் கூறியிருக்கிறார். ஆனால் உயிரை மாய்த்துக் கொள்வார் என யாரும் நினைக்கவில்லை” என்றார். 

தனது விருப்பத்தை அடைய முடியவில்லை என்ற ஏக்கத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பிள்ளைகளை அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என பெற்றோர் கேட்க வேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தியிருக்கிறது. அதே போல் பொறியியல் படித்த பின்னும் கூட நல்ல ஆசிரியராக மாற வழியுண்டு. இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. வாழ்க்கை தடைகள் மிகுந்த இலக்குதான், ஆனால் அடைய முடியாதது இல்லை என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலை அவசியமாகிறது.