2011ல் வெளியான கன்டாஜியன் (Contagion) என்ற திரைப்படத்தில் மருத்துவராக நடித்த நடிகை கேத் வின்ஸ்லெட் ஒரு வசனத்தில், சராசரி மனிதன் தினமும் 2,000 முதல் 3,000 முறை கைகளை முகத்தருகே கொண்டு செல்கிறான் என்று கூறியிருப்பார். இந்த வசனத்துக்கு புள்ளிவிவர ஆதாரம் ஏதுமில்லை என்றாலும், முகத்தை தனது கைகளால் மனிதன் அடிக்கடி தொடுவது உளவியல் ரீதியான விஷயம் என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள்.
கண்ணாடியில் முகத்தைப் பார்த்து அலங்கரித்துக் கொள்வது போன்றவை தவிர்த்து, அனிச்சை செயலாக மனிதன் கைகளால் அடிக்கடி தொடும் பாகம் முகம்தான் என்கிறார்கள் உளவியலாளர்கள். தீவிர சிந்தனை, மன அழுத்தம், அழுகை, கண்களை சுத்தப்படுத்தல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு கைகள் தானாகச் செல்லுமிடம் முகம்தான். முகத்தை உடலின் சொத்தாகக் கருதுவதால், அதை பொலிவாக வைத்துக் கொள்ள தானாக கைகளை மனிதன் அடிக்கடி பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்.
ஆனால், கொரோனா போன்ற கொடுந்தொற்றுக் கிருமிகள் இந்த செயல்களால் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. முகத்தைத் தொடுவதை தவிர்க்க இயலாதவர்கள் கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் போட்டுக் கழுவுவதுதான் வழி என்கிறார்கள். கைகளுக்கு எப்போதும் வேறு வேலை கொடுத்துக் கொண்டேயிருந்தால், முகத்தின் பக்கம் வராமலிருக்கும் என்பதுதான் மற்றொரு வழி ஆகும்.