கொரோனா வைரஸ்

ஐ.நாவுக்கான கோவாக்சின் சப்ளையை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம் - இதுதான் காரணம்!

Veeramani

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை ஐக்கிய நாடுகள் சபையின் ஏஜென்சிகள்  மூலம் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஏஜென்சிகள் மூலம் கோவாக்சின் தடுப்பூசி விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டதை உறுதிசெய்துள்ளதுடன், இந்த தடுப்பூசியைப் பெற்ற நாடுகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரைத்திருக்கிறது. மேலும், தடுப்பூசி உற்பத்தியாளரின் வசதிகளை மேம்படுத்தவும், ஆய்வில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.



மேலும், தரவுகளின் அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசி பயனுள்ளது என்றும், இது குறித்த பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், ஏற்றுமதிக்கான உற்பத்தியை நிறுத்துவதனால் கோவாக்சின் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மார்ச் 14 முதல் 22 வரை ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளை நடத்தியது. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு கோவாக்சின் உற்பத்தியை குறைக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

இது தொடர்பாக கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சினின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்த தாக்கமும் இல்லை என்பதால் இதற்காக வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்கள் இன்னும் செல்லுபடியாகும்" என்று தெரிவித்துள்ளது.



மேலும், "வரவிருக்கும் காலத்திற்கு ஏற்ப நிறுவனம் நிலுவையில் உள்ள பராமரிப்பு, செயல்முறை மற்றும் வசதி மேம்படுத்தல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக கோவாக்சின் உற்பத்தியைக் குறைக்கவுள்ளோம்" என அறிவித்துள்ளது.