கொரோனா வைரஸ்

ஜனவரி மாதமே இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை: ஆர்டிஐயில் தகவல்

webteam

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூகாண் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஜனவரி 11 ஆம் தேதி கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கையை இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த நோய் கட்டுப்பாட்டு மையம்,  தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் இது குறித்தான எச்சரிக்கைச் செய்தியை மத்திய அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தனுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

அவர் அமைச்சருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் “ சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஆகவே நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். ஜனவரி 5 ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 59 நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதும் அதில் ஒருவர் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் 6 நபர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில் மீதமுள்ள 52 நபர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் ஜனவரி 30 ஆம் தேதி கொரோனாத் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , 77 லட்சம் மக்கள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 17 ஆயிரம் நபர்கள் உயிரிழந்துள்ளனர்.