கொரோனா வைரஸ்

இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் - உலக சுகாதார நிறுவனம்

இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் - உலக சுகாதார நிறுவனம்

webteam

இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் என உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா என்ற வார்த்தையுடனேயே உலக நாடுகள் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கின்றன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது மட்டுமின்றி, உலக நாடுகளின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்து துறைகளையும் பழிவாங்கியுள்ளது கொரோனா. இதற்கிடையே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

பல நாடுகள் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனைக்கு வந்துள்ளன.  உலக சுகாதார நிறுவனமும் கொரோனா குறித்தான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் என நம்புகிறோம். 1918ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் வேகமாக பரவிய நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. இப்போது பிரச்னை என்னவென்றால் அதிக தொழில்நுட்பம். இதனால் கொரோனா எளிதில் பரவ வழியாக உள்ளது. அதேவேளையில் அதே தொழில்நுட்பமும், அறிவும் தான் கொரோனாவை தடுத்த நிறுத்தவும் உதவி செய்யவுள்ளது என தெரிவித்துள்ளார்