கொரோனா வைரஸ்

'கொரோனா இன்னும் ஓயவில்லை; 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35% உயர்வு' - WHO எச்சரிக்கை

JustinDurai

கொரோனாவால் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்று பரவத் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கொரோனா மறைவதற்கான அறிகுறி தென்படவில்லை. உலகம் முழுவதும் தினசரி கொரோனா தொற்று உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ''ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35% அதிகரித்துள்ளது. கொரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கொரோனாவுடன் வாழும்போது நாம் இதுவரை கடைபிடித்துவந்த முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கூட்டங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கைவிடக் கூடாது.

உலகம் முழுவதும் இதுவரை 59 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டு 9.3 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அடுத்தபடியாக இந்தியாவில் தான் 4.4 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தயவு செய்து நீங்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இரண்டு தவணை செலுத்திவிட்டிருந்தால் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாம் கைவிடக் கூடாது'' என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ’நோ சர்க்கரை.. நோ, ஸ்நாக்ஸ்’ - விராட் கோலி சொல்லும் ஃபிட்னஸ் சீக்ரெட்!