கொரோனா வைரஸ்

”செப்டம்பர் வரை பூஸ்டர் டோஸ் வேண்டாம்”- உலக நாடுகளிடம் WHO கோரிக்கை வைத்ததன் பின்னணி என்ன?

”செப்டம்பர் வரை பூஸ்டர் டோஸ் வேண்டாம்”- உலக நாடுகளிடம் WHO கோரிக்கை வைத்ததன் பின்னணி என்ன?

நிவேதா ஜெகராஜா

உலக சுகாதார நிறுவனம் சார்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, அடுத்த வாரத்தில் 20 கோடியாக உயரும் என தெரிவித்துள்ளனர். மேலும் அதிகளவு புதிய தொற்றாளர்கள் பதிவாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகியவைதான் உள்ளதென்றும், 80% புதிய தொற்றாளர்கள் இங்கிருந்தே பதிவாகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் கொரோனாப் பரவலை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமானதாக இருக்கும் தடுப்பூசியின் பங்கு குறித்து பேசியபோது, பூஸ்டர் டோஸ் பற்றிய தங்களின் நிலைப்பாடு ஒன்றையும் முன்வைத்துள்ளனர் அதன் அதிகாரிகள்.

இந்த சந்திப்பில் பூஸ்டர் டோஸ் குறித்து அவர்கள் பகிர்ந்துக்கொண்ட சில தகவல்கள்: “மிகவேகமாக பரவும் தன்மைகொண்ட டெல்டா வகை கொரோனா, இதுவரை 135 நாடுகளுக்குப் பரவியுள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த உதவும் தடுப்பூசி பயன்பாட்டை பொறுத்தவரை, ஏழை நாடுகள் பலவற்றுக்கும் இன்னமும் அவர்களுக்கு முதல் டோஸ் - இரண்டாவது டோஸ் தடுப்பூசியே கிடைக்கவில்லை. அதேநேரம் பணக்கார நாடுகள் அனைத்தும், 100 பேருக்கு 100 டோஸ் போடுவது என்ற விகிதத்தில் இருக்கிறது. ஏழை நாடுகளுக்கோ 100 பேருக்கு 1.5 டோஸ் என்றே டோஸ்கள் கிடைக்கிறது. இப்படி அடிப்படை டோஸ் தடுப்பூசியே பலருக்கும் கிடைக்காமல் இருப்பதால், பணக்கார நாடுகள் பூஸ்டர் டோஸ் குறித்து யோசிக்கின்றன. அதனாலேயே இப்போதைக்கு பூஸ்டர் டோஸ் குறித்து யோசிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். குறைந்தபட்சம் செப்டம்பர் இறுதிவரையாவது பூஸ்டர் டோஸ்கள் உபயோகத்தை நாடுகள் நிறுத்தவேண்டும்.

எல்லா நாடுகளும் தங்கள் மக்களை டெல்டா கொரோனாவுக்கு எதிராக மாற்றவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டும், அடுத்தடுத்து தேவைக்கு அதிகமாக டோசேஜ்களைக் கொடுக்க நாடுகள் முனைவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகின் பிற இடங்களிலுள்ள, தொற்று அபாயம் அதிகமுள்ள எத்தனையோ மனிதர்கள் தங்களின் முதல் டோஸே கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள் என்பதை இப்படியான நாடுகள் உணரவேண்டும்.

எங்களின் (உலக சுகாதார நிறுவனத்தினர்) திட்டப்படி செப்டம்பர் இறுதிக்குள் உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 10% பேருக்காவது தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். அதுவரை பூஸ்டர் டோஸ் விநியோகம் இருக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொள்கிறோம். ஏழை நாடுகளில் தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்த, எங்களுக்கு எல்லா தரப்பிலிருந்தும் ஆதரவு தேவைப்படுகிறது. குறிப்பாக அதிக தடுப்பூசி வைத்திருக்கும் நாடுகள் மற்றும் உலகளாவிய அளவில் தடுப்பூசிகளை விநியோகிக்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவைப்படுகிறது” எனக் கூறியுள்ளனர்.

தற்போதைக்கு டெல்டா வகை கொரோனா பரவல்தான் உலகளவில் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. அதற்கு இந்தியாவும் விதி விலக்கல்ல. இந்தியாவில் டெல்டா வகைதான் இரண்டாம் அலை கொரோனாவை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. நிலைமை தற்போது கொஞ்சம் சரியாகியிருப்பதால், பலரும் இந்தியா தனது இரண்டாவது அலையிலிருந்து மீண்டுவிட்டதாக நினைக்கிறோம். ஆனால் நிதி ஆயோக்கின் மருத்துவத்துறை உறுப்பினர் வி.கே.பால் நேற்று முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “டெல்டா வகை கொரோனா பரவல், இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. கொரோனா பேரிடரோ அல்லது இரண்டாவது அலை கொரோனாவோ இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆகவே அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்” என்று கூறி டெல்டா கொரோனா பரவல் குறித்து எச்சரித்திருந்தார்.

டெல்டா பரவல் எந்தளவுக்கு ஆபத்தானதாக உள்ளதோ, அதே அளவுக்கு டெல்டா கொரோனாவுக்கான எதிரான தடுப்பூசிகளின் செயல்பாடுகளும் கேள்விக்குறியாக உள்ளது. நேற்றைய தினம் ஐ.சி.எம்.ஆர் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், ஒருமுறையாவது கொரோனாவிலிருந்து மீண்டு - இரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்களுக்கே, டெல்டா வகை கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா வந்து மீள்வதென்பதே, மிகப்பெரிய சவாலாக இருக்கும் நேரத்தில் இப்படியொரு ஆய்வு முடிவு வந்திருப்பது, மருத்துவ வல்லுநர்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, கோவிஷீல்டு தடுப்பூசிகள் விரைவில் தனது செயல்திறனை இழப்பதாகவும் - குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டால் மட்டுமே நீடித்த பலனை பெறமுடியும் என்றும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அப்படியிருக்கும்போது, அதை இப்போதைக்கு தரவேண்டாமென உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது, வரும் மாதங்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்டோருக்கும்கூட கொரோனா பரவும் வாய்ப்புகள் உருவாகுமோ என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. இருப்பினும் இப்போதைக்கு ஒரு டோஸ்கூட கிடைக்காதவர்களையே கணக்கில் கொள்ளமுடியும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் வாதமாக இருக்கிறது.

தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ்கள், குறிப்பாக டெல்டாவுக்கு எதிரான கொரோனா தடுப்பூசி மீதான இந்த விமர்சனங்களும் கேள்விகளும் தற்போது மருத்துவ உலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.