கொரோனா வைரஸ்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. எந்தெந்த மாநிலங்களில் அதிகரிப்பு? - முழு தகவல்

sharpana
கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், எந்தெந்த மாநிலங்களின் முக்கிய நகரங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது என்பதை விரிவாக காணலாம்.

கொரோனா தாக்கம் வெகுவாக இந்தியாவில் குறைந்திருந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி இருந்தார்கள். இதனையடுத்து பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியிருந்தனர். ஆனால், மீண்டும் கவலை அளிக்கும் விதமாக கொரொனா வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலேயே அதிகமாக ஹரியானா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், டெல்லி, மிசோரம் ஆகிய மாநிலங்களில்தான் தற்போதைக்கு கொரோனா மிக அதிக அளவில் பரவி வருகிறது. இதனையடுத்து இந்த ஐந்து மாநிலங்களிலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை இரு தினங்களுக்கு முன்பு 137 புதிய பாதிப்புகளும், 3 மரணங்களும் ஏற்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தை ஒப்பிடும் பொழுது இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், தலைநகர் டில்லியில் தினசரி பாதிப்பு என்பது 50 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால்தான், டெல்லியில் முகக் கவசம் கட்டாயம் என்றும் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை தினமும் 100க்கு மேல் புதிய பாதிப்பு என்பது ஏற்பட்டு வரக்கூடிய நிலையில் சில முக்கியமான மாவட்டங்கள் மட்டும் மிக வேகமாக வைரஸ் பரவல் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்துதான், லக்னோ, மீரட், நொய்டா உள்ளிட்ட 8 நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.


கேரளாவை பொறுத்தவரை அம்மாநில அரசு சரிவர பாதிப்பு எண்ணிக்கைகளை கொடுப்பதில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியது. இது தொடர்பாக, மாநில அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. பெரு நகரங்களை பொருத்தவரை சென்னை, மும்பை, பெங்களூரு, கல்கத்தா, புனே உள்ளிட்ட நகரங்கள் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவது புள்ளி விவரங்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகின்றது.
R value என அழைக்கப்படும் மறு உருவாக்க விகிதம் டெல்லியைப் பொறுத்தவரை கடந்த மாதம் 0.7 ஆக இருந்த நிலையில் தற்போது 2.12 ஆகவும், ஹரியானாவில் 0.72 ஆக இருந்த நிலையில் 1.70 ஆக அதிகரித்துள்ளது.

உபியில் 0.66 ஆக இருந்த நிலையில், 2.12 ஆக அதிகரித்துள்ளது. மிசோரத்தில் 0.67 ஆக இருந்த நிலையில் 0.83 ஆக அதிகரித்துள்ளது.
எனவே, அதிக அளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வது தடுப்பூசி போடப்படாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, கட்டுப்பாடுகளை முறையாக செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.