கொரோனா வைரஸ்

எப்போது குறையும் கொரோனா வைரஸின் தாக்கம் ?

எப்போது குறையும் கொரோனா வைரஸின் தாக்கம் ?

jagadeesh

கொரோனா வைரஸின் தாக்கம் எப்போது நீங்கும் என உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த வைரஸின் தாக்கம் எப்போது குறையும் என்பதற்கு கடந்தகால வைரஸ் தாக்குதல்களில் சில அறிகுறிகள் இருக்கின்றன.

சீனாவைக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் புரட்டி எடுத்த சார்ஸ் வைரஸ்க்கு எத்தகைய அறிகுறிகள் இருந்ததோ, அதே அறிகுறிகள் தான் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு வைரஸ் பாதிப்புகளையும் சமாளிக்க ஒரே வழி தனிமைப்படுத்துவது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 2003 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய சார்ஸ் வைரஸ், 8 ஆயிரம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி 800 பேரின் உயிர்களை பறித்தது. ஆனால் சுமார் 6 மாதங்களில் சீனாவிலிருந்து மறைந்தது.

சார்ஸ் வைரஸ் ஈரப்பதமான சூழ்நிலையில்தான் வீரியத்துடன் காணப்பட்டது. கோடைக் காலத்தில் ஏற்பட்ட அதிக வெப்பத்தில் மறைந்தது என சில ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சார்ஸ் வைரஸின் அனைத்து பண்புகளையும் கொரோனா வைரஸ் கொண்டிருப்பதால், இதுவும் வெப்பத்தில் அழிந்துபோக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் கொரோனா வைரஸ் மிகவும் தந்திரமானது. சார்ஸ் வைரஸை விட கொரோனா வைரஸின் ஸ்பைக் புரத வடிவமைப்பானது மனிதனின் செல் மீது 10 முதல் 20 மடங்கு அதிக வலுவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது.

அதாவது கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் 20 நாட்கள் தங்கும் திறன் வாய்ந்தது. ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், இந்த வைரஸின் ஒற்றை இழையிலுள்ள நியூக்ளிக் அமில அமைப்பை எளிதில் கிழித்துவிடும். இதனால் வைரஸின் வீரியம் குறையும். ஆனால் விரைவாக மற்றவரின் உடலில் அது நுழைந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும். இதனாலேயே தொற்றுநோய்கள் குறுகிய காலத்தில் பலரை பாதிக்கிறது. 2003 ஆம் ஆண்டு தாண்டவமாடிய சார்ஸ் 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு 3 பேரை மட்டுமே தாக்கியுள்ளது.

அதன்பிறகு சார்ஸ்க்கு என்ன ஆனது? எங்கே போனது? என்பது ஆய்வாளர்களுக்கே தெரியவில்லை. இதேபோல் கொரோனா வைரஸும் மறைந்துவிடும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 2015 மற்றும் 2016க்கு இடைபட்ட காலத்தில் ஜிகா வைரஸ் தென் அமெரிக்காவை தாக்கியது. ஜிகா வைரஸ் ஒரே நபரை இரண்டு முறை பாதிக்காது. இதனால் பாதிக்க ஆட்கள் இல்லாமல் ஜிகா வைரஸ் காணாமல் போனது. பர்ன் அவுட் எனப்படும் இந்த முறை மிகவும் தீவிரமானது. இதனால் ஏராளமான மரணங்கள் நிகழம். சில வைரஸ்கள் பருவகால நோய்களாக மனிதர்களிடம் தங்கிவிடுகின்றன.

அமெரிக்காவில் தோன்றிய ஹெச்1என்1 வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலகெங்கும் பரவியது. இது இன்றுவரை பருவகால பாதிப்பாக இன்றும் நிலவுகிறது. கொரோனா வைரஸ் கொடூர ஆட்கொல்லியாக நீடித்து காணாமல் போகுமா அல்லது வீரியம் குறைந்த பருவகால நோயாக மாறப்போகிறதா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.