மும்பை அமராவதி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வந்த 23 வயது பெண் கொரோனா சோதனை செய்ய பக்கத்தில் இருந்த ஒரு பரிசோதனை மையத்திற்கு சென்றுள்ளார்.
முதலில் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுத்த டெக்னீஷியன் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியிருப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும் துல்லியமான சோதனை முடிவைப் பெற பிறப்புறுப்பு பகுதியில் இருந்து மாதிரிகளை எடுக்கவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் அந்த பெண். வேறு யாராவது பெண் ஊழியர்கள் உள்ளார்களா எனகேட்டதற்கு யாருமில்லை என கூறிவிட்டார். இந்த சோதனை அவசியம் என வலியுறுத்தியதால் அந்த பெண் கடைசியாக மாதிரிகளை எடுக்க ஒத்துக்கொண்டுள்ளார். அவரை அங்கிருந்த தனியறைக்குக் கூட்டிச் சென்று மாதிரிகளை எடுத்து சோதனை செய்து பார்த்ததில், கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்ததாகக் கூறி அனுப்பிவிட்டார்.
இதுபற்றி அந்த பெண் தன் சகோதரரிடம் கூறவே, அவர் மருத்துவர்களிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்படி ஒரு சோதனை எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்ட அவர் அந்த லேப் டெக்னீஷியன் மீது புகார் அளித்துள்ளார். இதனால் கற்பழிப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாகூர், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.