கொரோனா வைரஸ்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? - வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? - வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் முடிவடையவிருக்கும் நிலையில், தளர்வு நீட்டிப்பு குறித்தும் கொரோனா பாதிப்பு குறித்தும் மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில் செப்.1ம் தேதி பள்ளிக் கல்லூரி திறப்பு உறுதியென்ற முடிவை குழு எடுத்துள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில், சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்களுக்கான தடை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்.10ம் தேதி நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதற்கான வழிகாட்டுதல்களும் அரசின் அறிவிப்பில் வெளிவந்துள்ளது.

அதில் மிக முக்கியமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாடுவதற்கும், உரியடி போன்ற விழாக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை இல்லங்களிலேயே வைத்துக் கொண்டாடுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிலைகளை கரைக்கும்போது, தனி நபர்களாக சென்று நீர்நிலைகளில் கரைக்குமாறு கூறியுள்ள அரசு, அதற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.

ஆலயங்களின் சுற்றுப்புறத்தில் வைத்துச் செல்லப்படும் விநாயகர் சிலைகள் இந்து சமய அறநிலையத்துறையால் முறையாக அகற்றப்படும் என்றும், மத விழாக்களுக்காக பொருட்களை வாங்கச் செல்லும்போது தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

விநியோகர் சதுர்த்தி போலவே சென்னை, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மரியன்னை பிறந்தநாள் (செப்.8) திருவிழாக்களுக்கும் தடை விதித்துள்ளது தமிழக அரசு. மரியன்னை பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.