திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்க வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது.
நாள்தோறும் 800 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வரும் நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஸ்கிரீனிங் சோதனை செய்யப்பட்டு, பனிமலர் கல்லூரி, ஏசிஎஸ் கல்லூரி மற்றும் பட்டரைபெருமந்தூரில் உள்ள அரசு சட்ட கல்லூரிகளில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அதே போல, கொரோனா பாதிப்பு அதிகமானோருக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், போதிய படுக்கை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் டீன் அரசியிடம் கேட்ட போது, மொத்தம் உள்ள 350 படுக்கைகளில் 154 பேர் இதுவரை சிகிச்சை பெற்று வருவதாகவும், போதிய படுக்கை வசதிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா மருத்துவ ஸ்கிரீனிங் சோதனை எடுப்பதாக தங்கியுள்ளவர்கள் தரையில் அமர்ந்தும், படுத்தும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளித்துள்ளார். “உடனடியாக இந்த நிலை சரி செய்யப்படும். கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும், கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டும் நாளை முதல் மே 5-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது. ஆனால், அவசர சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்டவை வழக்கம் போல செயல்படும். நாளொன்றுக்கு 7 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 1.26 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது” ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.