கொரோனா வைரஸ்

கொரோனாவால் இறந்ததாக எரியூட்டப்பட்டவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததால் அதிர்ச்சி!

kaleelrahman

கொரோனா நோய் தொற்று இருப்பதாகக் கூறி இறந்தவரின் உடலை அடக்கம் செய்த நிலையில், கொரானா இல்லை என மருத்துவ அறிக்கை வந்துள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆண்டிவடன் செட்டியூர் கிராமத்தை சேர்ந்த 33 வயதான வடிவேல் என்பவருக்கு ரேவதி என்கிற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். வடிவேலுக்கு கடந்த 6ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடிவேலுக்கு காய்ச்சல் இருப்பதால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். 

இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி வடிவேலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வடிவேல் அன்றே உயிரிழந்தார். மத்திய அரசின் வழிகாட்டுதலின்;படி வடிவேலின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து வடிவேலை மின் மயானத்தில் எரியூட்டப்பட்டதற்காக மதுரை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு சார்பில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளன.

ஆனால் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொNhரனா இல்லை என முடிவு வந்துள்ளது. இதனையடுத்து தன் கணவர் இறப்பில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகவும், தான் 3 குழந்தைகளுடன் வாழ்வாதார பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் மனு அளித்தார்.


மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கொரோனா மருத்துவமனை சார்பில் கொடுக்கப்படும் சான்றிதழ் மட்டுமே உறுதியானது, மாநகராட்சி வழியே கொடுக்கப்பட்ட சான்றிதழ் குறித்து விசாரிக்கப்படும் எனவும் , வடிவேலின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் தொண்டு நிறுவனத்தின் மூலம் செய்யப்படும் என தெரிவித்தார்.


மாறுபட்ட சான்றிதழ் காரணமாக வடிவேலின் முகத்தை கூட அவரது குடும்பத்தினர் பார்க்க முடியவில்லை என அவரது மனைவி கண்ணீர் மல்க தனது வேதனை வெளிப்படுத்தினார்.