கொரோனா வைரஸ்

“தந்தையின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை”- ராணுவ வீரர் வேதனை

PT

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ராணுவ வீரர் தவித்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாமல் தனிமைப்படுத்துதல் முகாமில் தவித்து வருவதாகக் கூறி வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் இராணுவ வீரராக பணியாற்றி வரும் ஒருவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார். திருச்சியிலிருந்து மதுரை வந்த அவரை அதிகாரிகள் மூன்று நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வேண்டும் எனக்கூறி தனியார் கல்லூரியில் தங்க வைத்துள்ளனர். இந்தத் தனிமைப்படுத்தலினால் தந்தையின் இறுதிச் சடங்கில் அவரால் பங்குகொள்ள முடியவில்லை எனக் கூறி அவர் ஒரு வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது “ ஜம்மு காஷ்மீரிலிருந்து திருச்சிக்கு வந்தேன். அங்கு எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து நான் விருது நகர் வந்தேன். ஆனால் விருதுநகரில் என்னை வழிமறித்த அதிகாரிகள் என்னை கட்டாயம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று கூறி தனியார் கல்லூரியில் தங்க வைத்து விட்டனர். என்னிடம் உடற்தகுதிச் சான்றிதழ் இருந்த போதும் அவர்கள் என்னை ஊருக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இன்று தந்தையின் இறுதிச் சடங்கில் இருக்க வேண்டிய நான் இங்கிருந்து தவித்து வருகிறேன். நாட்டின் பாதுகாப்புக்காக போராடும் எங்களுக்கு கூட இந்த நிலைமைதான் இருக்கிறது.” என்று அதில் வேதனையுடன் பேசியுள்ளார்.