கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஒரேநாளில் 6,983 பேருக்கு தொற்று உறுதி

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் கொரோனா தினசரி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, 24 மணி நேர இடைவேளையில், 16,000 லிருந்து 22,000 ஆக தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

22,000 பேர் கொரோனா சிகிச்சை எடுத்துவந்தாலும்கூட, அவர்களில் 4,380 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற ஆறுதலளிக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது. மீதமுள்ள சுமார் 17,500 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, தொற்று உறுதியாவோர் சதவீதம் 4.1 என்றும், சென்னையில் 9.6 என்றும் உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதியானோர் பற்றி தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,983 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியவர்கள் எண்ணிக்கை 721.

கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 4 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 27,67,432 என்று உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனவிலிருந்து மீண்டவர்கள், 27,07,779 என்று உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவினால் உயிரிழந்ந்தவர்கள் 36,825 பேர். சென்னையில் கோவிட் பாதித்த 116 பேர் ஐசியூவில் சிகிச்சையில் உள்ளனர்.