கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதால், தமிழக கர்நாடக மாநிலங்கள் கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த 2 மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: புதிய மைல்கல்: 50% பேருக்கு முதல் தடுப்பூசி நிறைவு - மத்திய அமைச்சர் தகவல்
கேரளாவில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இரு மாநில மருத்துவத்துறை அமைச்சர்களுடனும் தொலைபேசியில் பேசியிருந்தார். அதன்முடிவில், இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் மட்டுமன்றி கேரள எல்லையையொட்டிய தமிழக, கர்நாடக மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது, பொதுமக்கள் சரியாக கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றாததால், கடந்த 1 வாரத்திற்கும் மேலாக தினசரி தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை ஒட்டிய நிலையிலேயே இருந்துவந்து. இன்றைய தினம்கூட, தொடர்ந்து 2வது நாளாக ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தே இருந்தது. அதே போல் ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், இந்த வாரம் தினசரி நோய் பாதிப்பு 40 ஆயிரமாக பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு மாவட்டங்களான மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது.
முன்னதாக இன்றைய தினம், கேரள - தமிழக எல்லையான கோவை மாவட்ட எல்லையோர பகுதியில் உள்ள சுயநிதி கல்லூரிகள் சில திறக்கப்படவில்லை. பள்ளிகளைப் பொறுத்தவரை, கோவையில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 81 சதவீத ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்தார்.
அதேபோல தமிழக-கேரள எல்லையில் உள்ள தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த ஆசிரியர்கள் கட்டாயம் கேரளா திரும்ப செல்ல கூடாது எனவும், பணியாற்றும் பகுதியிலேயே தங்கவேண்டுமென நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உத்திரவிட்டுள்ளார்.