கொரோனா வைரஸ்

முழு ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை: தமிழக காவல்துறை எச்சரிக்கை

முழு ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை: தமிழக காவல்துறை எச்சரிக்கை

webteam

அத்தியவசியப் பணிகள் தவிர்த்து கொரோனா முழு ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் தேவையின்றி வெளியில் வாகனங்களில் வருவோர், நடமாடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசின் அறிவுரைகளை பின்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் டிஜிபி திரிபாதி
தெரிவித்துள்ளார்.

தொடர் அறிவுரைகளை பொதுமக்களில் ஒரு சிலர் மீறி நடப்பதால் கொடிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால் அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் தீவிரமாக கடைப்பிடிக்காத நிலையே இருந்து வருகிறது.

சாலைகளில் சாரைசாரையாக அணி வகுத்துச் செல்லும் வாகனங்கள், கடைவீதிகளில் அலை மோதும் கூட்டம். தமிழகத்தின் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் தென்படும் காட்சிகள் தான் இவை. இவற்றைப்பார்த்தால் தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலில் உள்ளதா என்ற கேள்வி எவர் மனதிலும் எழுவது இயல்பானதே.

ஆக்சிஜன் தாகத்தோடு தவிக்கும் நோயாளிகள், அவசர சிகிச்சை படுக்கைக்காக போராடும் உறவினர்கள், இரவுபகல் இடைவெளியின்றி இயங்கும் இடுகாடுகள் என சூழல் இருக்கையில் மறுபுறம் இதுபோன்ற காட்சிகள் சர்வசாதாரணமாக தென்படுவது மக்களுக்கு சூழ்நிலையின் தீவிரம் புரியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிகின்றனர். கடந்த ஆண்டு முழு பொதுமுடக்கத்தின் போது வெறிச்சோடி காணப்பட்ட சென்னை, தற்போது வழக்கமான நாட்களைப் போல காட்சியளிக்கிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதே அதற்கு உதாரணம்.

சென்னையை அடுத்த ஆவடியில் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் முழுமுடக்கம் இல்லாத சாதாரண நாட்களை ஒத்திருக்கிறது ஆவடி. அதுமட்டுமல்லாமல் பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் ஏராளமானோர் பொருட்கள் வாங்கக் குவிந்தனர். இதனால் தனிமனி இடைவெளி கேள்விக்குறியானது.

திருச்சியிலும் இதே நிலைதான். காந்தி மார்க்கெட் பகுதியில் கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்தால் தமிழகத்தில் முழு முடக்கம் என்று நிச்சயம் சொல்ல முடியாது. அதில் சிலர் முகக்கவசத்தை கீழே இறக்கிவிட்டு உலவுவது கூடுதல் அதிர்ச்சி. தனிமனித இடைவெளியும் பின்பற்றுவதில்லை. வேகமாக பரவிவரும் நோய்த் தொற்றை கட்டப்படுத்தவே முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சுற்றித்திரிவது வினையாகவே வந்து முடியும். அதே போல் சாலைகளிலும் ஏராளமானோர் வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர்.

சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்ய வந்தார். அப்போது கூடிய கட்சித் தொண்டர்கள் கூட்டம் கொரோனா கட்டுப்பாடுகளை மறந்தே போயிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் முழுமுடக்க காலத்தில் பொதுமக்கள் கடைகளில் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போல் பாகலூர் சாலை, வட்டாட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இப்படி சாலையில் சுற்றித்திரிவோரை காவல்துறையினர் கட்டுப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது, பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவே இந்தப் போக்கிற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.

இந்தச் சூழலில், அத்தியவசியப் பணிகள் தவிர்த்து கொரோனா முழு ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.