இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா ஏற்பட்டாலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை, 75 முதல் 80 சதவிகிதம் குறைவாக உள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கையும், 8 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில், இவையாவும் கூறப்பட்டுள்ளது.
மே 7 ம்தேதி பதிவான கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையே, இந்தியாவில் இதுவரை பதிவான மிக அதிகமாக தொற்றாளர்கள் எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது. அதோடு ஒப்பிடுகையில், தற்போது 85 சதவிகிதம் தினசரி தொற்றாளர்கள் குறைந்திருப்பதாகவும் அரசு தரப்பு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மே 10 பதிவான ஒருநாள் தொற்றாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 78.6 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.