கொரோனா வைரஸ்

'கொரோனாவை தடுக்க 2 மீட்டர் சமூக இடைவெளி போதாது’- பிரிட்டன் ஆய்வில் தகவல்

நிவேதா ஜெகராஜா

கொரோனா தொடர்பான சமீபத்திய ஆய்வொன்று, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுவதன் அவசியம் குறித்து ஆய்வு செய்துள்ளது. அதன்முடிவில், கொரோனாவை தடுக்க சொல்லப்படும் ‘2 மீட்டர் சமூக இடைவெளி’ கோட்பாடு, உண்மையில் கொரோனாவை தடுப்பதில்லை எனக்கூறப்பட்டுள்ளது.

ஃபிஸிக்ஸ் ஆஃப் ஃப்ளூயிட்ஸ் என்ற மருத்துவ இதழின் இந்த வார பதிப்பில், இந்த ஆய்வு வெளிவந்துள்ளது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷ்ரே திரிவேதி ஆய்வாளராக இருந்திருக்கிறார். இந்த ஆய்வை ‘பொறியியல் மற்றும் இயற்பியல் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்’ என்ற பிரிட்டன் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் முன்னெடுத்திருக்கிறது.

ஆய்வில், இருமல் வழியாக கொரோனா எந்தளவுக்கு பரவுகிறது என்பது குறித்து முதன்மையாக ஆய்வு செய்யப்பட்டிருந்திருக்கிறது. அப்படி ஆய்வு செய்கையில், கொரோனா பாதித்த ஒரு நபர் இருமும்போது, பேசும்போது, சுவாசிக்கும்போது போன்ற நேரங்களில் அவரிடமிருந்து வெளிவரும் திரவம், காற்றிலேயே அடுத்த சில நிமிடங்களுக்கு மிதந்தபடி இருப்பது தெரியவந்துள்ளது.

அப்படி காற்றில் மிதக்கும் திரவம், அங்கு இருப்போருக்கு கொரோனாவை பரப்பும். அந்தநபர் இரு மாஸ்க் அணிந்திருந்தாலும்கூட, அவர் ‘இரு மீட்டர் சமூக இடைவெளி’ மட்டுமே பின்பற்றுகின்றார் எனும்பட்சத்தில் அவருக்கு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. இதை அடிக்கோடிட்டு கூறும் ஆய்வாளர்கள், கொரோனாவை தடுக்க ‘தடுப்பூசி போட்டுக்கொள்வது - மாஸ்க் அணிவது - இரண்டுக்கும் மேற்பட்ட மீட்டர் தொலைவில் இருப்பது (மூன்று அல்லது அதற்கு மேல்)’ என அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தது எனக்கூறியுள்ளனர்.

ஆய்வாளர்களில் ஒருவரான ஷ்ரே திரிவேதி கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதன் பின்னணியில் வைராலஜி என்ற கோட்பாடு உள்ளது. வைராலஜி என்பது, ‘உங்கள் உடலுக்கு எவ்வளவு வைரஸ் உள்ளது, நீங்கள் பேசுகையிலும் இருமும்போதும் உங்களிடமிருந்து எவ்வளவு வைரஸ் வெளியேறுகிறது’ ஆகும். இதை அடிப்படையாக வைத்தே, கொரோனா பரவலையும் நிர்ணயிக்கிறோம்” என்றுள்ளார்.