கொரோனா வைரஸ்

இந்தியா: அக்டோபர் 15-20க்குள் பயன்பாட்டுக்கு வருகிறது 12+ வயதினருக்கான ஊசியில்லா தடுப்பூசி

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜைகோவ்-டி கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான பணிகள் யாவும் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என நோய் தடுப்பிற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.

டி.என்.ஏ அடிப்படையில், சைடஸ் கடிலா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, ஊசியில்லாமல் ஜெட் இன்ஜெக்டர் என்கிற கருவியால் உடலில் செலுத்தப்படவுள்ளது. 3 தவணை ஊசியான இதில் முதல் தவணை செலுத்திய 28ஆவது நாளில் இரண்டாவது தவணையும், 56ஆவது நாளில் மூன்றாவது தவணையும் செலுத்த வேண்டியிருக்கும். 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு ‌‌இதனை செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த கொரோனா தடுப்பு மருந்து வருகிற அக்டோபர் 20ஆம் தேதிக்குள் பெரியவர்களுக்கு நாடு முழுவதும் ‌‌பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக, நோய் தடுப்பிற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு கூறியுள்ளது. ஜைகோவ்-டி கொரோனா தடுப்பு மருந்தின் விலை ரூ.1,900 ரூபாயாக முன்மொழிந்துள்ளதாகவும், விலையை குறைக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.