சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று உயர்ந்துள்ளதால் போதிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச பயணிகளை கண்காணிக்கவும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இடங்களின் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை மரபணு சோதனைக்கு விரைவாக அனுப்பி, தொற்றின் பாதிப்பை முன்கூட்டியே அறிவதற்கான வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இச்சூழ்நிலையை சமாளிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு போதுமான உதவியை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.