கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களில் சிலருக்கு நுரையீரல் அல்லது இருதய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சாட்டர்ஜி கூறுகையில். ''கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்ட பிறகு நீண்ட கால பாதிப்புகள் ஏதேனும் நேர்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இச்சூழலில் இப்போது கிடைத்துள்ள அறிக்கையின்படி கொரோனாவிலிருந்து மீண்டவர்களில் சிலருக்கு இருதயம், நுரையீரலில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
வென்டிலேட்டரில் இருந்த நோயாளிகள் அல்லது மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் மிக அதிக ஆக்ஸிஜன் அளவு தேவைப்பட்ட நோயாளிகள் குணமடைந்த பின் மீண்டும் வெளிநோயாளியாக வரும்போது, அவர்களில் பெரும்பாலோர் இயல்பை விட குறைந்த ஆக்ஸிஜன் அளவை கொண்டுள்ளனர். இதனால் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் ஒருவித நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் உருவாகிறது. பொதுவாக நுரையீரலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது ஃபைப்ரோஸிஸிற்கு வழிவகுக்கிறது.
ஆக்சிஜன் செறிவு குறைவாக உள்ள பல நோயாளிகள் ஹைபோக்சி தெரபிக்கிற்கு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஹோம் ஆக்சிஜனும் தேவைப்படுகிறது. கொரோனா தொற்றுக்குள்ளாகும்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிறது. இதன் காரணமாகவே, நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்படுவது குறைகிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகும் சிலருக்கு ரத்தத்தின் அடர்த்தியும் உறையும் வேகமும் அதிகமாகவே நீடிப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மூளையில் ரத்தம் உறைவது, மாரடைப்பு ஏற்படுவது ஆகிய பாதிப்புகள் சிலருக்கு நேரலாம்.
அடுத்ததாக, நுரையீரலில் நீர் கட்டிக்கொள்வது ஒரு முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. இதனால், இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக நோய்கள் ஆகியவை முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
எனவே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் வீட்டிலிருந்தவாறு உடலின் வெப்பநிலை மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு, உடலின் ஆக்சிஜன் அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி முக்கியம். டாக்டரின் ஆலோசனை பெற்று, மருந்துகளை தவறாமல் உட்கொண்டு, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் பயப்படத் தேவையில்லை.