கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,885 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 15,058 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக கேரளாவில் புதிதாக தொற்று உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல், தினசரி தொற்று 30,000 என பதிவாகி வந்த நிலையில், கடந்த ஐந்து தினங்களாக அது 30,000-க்கும் கீழே குறைந்து வருகிறது. அதுவும் கடந்த ஐந்து நாட்களாக தினசரி தொற்று பதிவு படிப்படியாக குறைந்த வண்ணமே உள்ளது.
இன்றைய பாதிப்புடன் சேர்த்து, கேரளாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,90,489 என உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் கேரளாவில் 99 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,650 என உயர்ந்துள்ளது. தற்பொழுது மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 2,08,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 28,439 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 41,58,504 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவது கேரள மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. ஆனாலும் கொரோனா விதிமுறைகளை தவறாது கடைப்பிடித்தும், தடுப்பூசி செலுத்தியும் தொற்றுப்பரவலை தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: கேரளாவில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 67 பேர் உயிரிழப்பு
முன்னதாக கேரளாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவான விவரங்களின்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 1,15,575 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 20,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்தினம் 1,34,861 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 20,487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 91,885 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 15,058 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பரிசோதனைகளை மட்டும் பார்க்கும்போது நேற்றைவிட இன்று 24,790 பரிசோதனைகள் குறைந்துள்ளது. தொற்று எண்ணிக்கையும் 5,182 எண்ணிக்கையில் இன்று குறைந்துள்ளது. கேரளாவில் நேற்று டிபிஆர்., 17.51 சதவீதமாக இருந்தது. இன்று டிபிஆர்., 16.39 சதவீதமாக குறைந்துள்ளது. இதில் தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கை குறைவது தெரியவருவதால், அதுசார்ந்த விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது. சீரான பரிசோதனை இருந்தால், பாதிப்பும் பிற புள்ளிவிவரமும் அதிகமாக இருக்குமென விமர்சனம் வைக்கப்படுகிறது.