கொரோனா வைரஸ்

30 மருத்துவர்களுக்கு தொற்று உறுதி;ஆனால் அறிகுறி இல்லை-ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர்

webteam

தொற்று கண்டறியப்பட்ட 30 மருத்துவர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லை என சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், ''தொற்று ஏற்பட்ட 4500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளித்துள்ளது எங்கள் மருத்துவமனை. கடந்த மார்ச் மாதம் முதல் இப்போது வரை முதல்நிலை களப்பணியாளர்களாகிய மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டுமே இதுவரை 3000 பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறோம்.

இப்பரிசோதனைகள் முதல்நிலை களப்பணியாளர்களின் நலன் கருதி தொடர்ச்சியாக தினசரி 150 பேருக்கு என்ற அளவில் பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். அவ்வகையில் கடந்த 2 நாட்களில் 30 மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் யாருக்கும் அறிகுறிகள் இல்லை. நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றன.

களப்பணியில் ஈடுபட்டுள்ள இதர துறைகளில் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையே மிக அதிகம் எனும் போது, ஒவ்வொரு நிமிடமும் தொற்று ஏற்பட்டுள்ள நபர்களுடனேயே இருந்து சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படுவதை நாம் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பெருமளவில் குறைத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.