கொரோனா வைரஸ்

ராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 8 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு

Veeramani

ராஜஸ்தானில் எட்டு மாவட்டங்களில் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூபாய் 500 ஆக உயர்த்தப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, நேற்று 3007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கோவிட் -19 வழக்குகளில் 8.8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இதுவரை மொத்தம் 2,40,676 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் “ கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, பிகானேர், உதய்பூர், அஜ்மீர், ஆல்வார் மற்றும் பில்வாரா ஆகிய 8 மாவட்டங்களின் நகர்ப்புறத்தில் உள்ள சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் ஆகியவை இரவு 7மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த மாவட்டங்களில் நகர்ப்புறங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவின்போது, திருமண விழாவுக்குச் செல்வோர், அத்தியாவசிய சேவைகள் தொடர்பான நபர்கள் மற்றும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். முகக்கவசம் அணியாதவர்களுக்காக அபதாரத்தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.