இந்தியாவில் கொரோனா பாதிப்பை பரிசோதனை செய்ய சர்வதேச ஆய்வகங்களும் அனுமதி கோரியுள்ளன.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோச் என்ற சர்வதேச ஆய்வகம் கொரோனா பாதிப்பை பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் அனுமதி பெற்றுள்ளது. இதுதவிர, பையோ மெரிக்ஸ் என்ற ஆய்வகம் உள்ளிட்ட தனியார் ஆய்வகங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுபாட்டு இயக்குநரகத்தின் அனுமதியை கோரியுள்ளன.
இதனிடையே அனுமதி பெற நாடியுள்ள ஆய்வகங்கள் குறித்து மதிப்பீடு செய்ய 7 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அனுமதி கோரும் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசும், இந்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனமும் இறுதி செய்துள்ளன. தனியார் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்காணிப்பில் இயங்கும்.
தற்போதுள்ள நிலையில் இந்தியாவில் 72 கொரோனா தொற்று பரிசோதனை நிலையங்கள் உள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இரு புதிய அதிநவீன பரிசோதனை மையங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இம்மையங்களில் ஒரு நாளில் ஆயிரத்து நானூறு மாதிரிகளை சோதனை செய்ய இயலும். இவ்வார இறுதிக்குள் நாடு முழுவதும் மேலும் 49 பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.