கொரோனா மூன்றாம் அலை இந்த வருடமே பரவக் கூடும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் அமைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த புகார்கள் குவிந்தன. மீண்டும் அத்தகைய தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆக்சிஜன் விநியோக உட்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை பிரதமர் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். 'மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கவேண்டும்' என மோடி வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். நாடு முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் பிரதமர் நல நிதி, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பிலிருந்து வாங்கப்படும் ஆக்சிஜன் ஆலைகளும் உள்ளடங்கியுள்ளன.
பிரதமரின் நல நிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் செயல்பட வேண்டும் என மோடி வலியுறுத்தினார். பிரதமரின் நலநிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அவை 4 லட்சம் படுக்கைளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கும் என பிரதமரிடம் தெரிவி்க்கப்பட்டது.
இந்த ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். ஆக்சிஜன் ஆலைகளை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில், மருத்துவமனை ஊழியர்களுக்கு போதிய பயிற்சியை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆக்சிஜன் ஆலை பராமரிப்பு குறித்த பயிற்சி மாதிரி நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 8000 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் மற்றும் தேசிய அளவில் ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டை கண்காணிக்க, இணையதளம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை நாம் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் கூறினார். ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க இணையதளம் போன்ற முன்மாதிரி திட்டத்தை பயன்படுத்தி வருவது பற்றி பிரதமருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். ஆக்சிஜன் உற்பத்தி குறித்து தொடர்ந்து தகவல்களை கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை அளித்தார்.
- கணபதி சுப்ரமணியம்