கொரோனா வைரஸ்

தமிழகத்தில் சில தினங்களில் பிளாஸ்மா சிகிச்சை - சுகாதாரத்துறை

webteam

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

பல்வேறு நாடுகளில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு பழைய குணமான நோயாளிகளின் ரத்தத்திலிருந்து ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்புசக்தியை பிரித்தெடுத்து புதிய நோயாளியின் உடலில் செலுத்தி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனா குணப்படுத்தப்படுவதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சிகிச்சையில் 6 பேர் முற்றிலும் குணமடைந்துவிட்டனர்.13 பேர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் பெற்று வருகின்றனர்.ஒருவருக்கு மட்டும் உடல்நிலையில் மாற்றம் இல்லை.

இந்தியாவிலேயே பிளாஸ்மா சிகிச்சையை நல்லமுறையில் மேற்கொண்டு வருவதாக சென்னை மருத்துவக் கல்லூரி பாராட்டைப் பெற்றுள்ளது .சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிளாஸ்மா சிகிச்சை பயிற்சிக்கு சில தினங்களில் ICMR அனுமதி கிடைக்க உள்ளது.அது கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடனடியாக பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது