கொரோனா வைரஸ்

திருப்பூரில் ஆக்சிஜன் பேருந்து வசதி: படுக்கைக்கு காத்திருக்கும் நேரத்தில் ஆக்சிஜன்!

திருப்பூரில் ஆக்சிஜன் பேருந்து வசதி: படுக்கைக்கு காத்திருக்கும் நேரத்தில் ஆக்சிஜன்!

EllusamyKarthik

திருப்பூரில் கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறலால் பாதிக்காமல் இருக்க ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மூச்சுத்திணறலுடன் வருபவர்கள் படுக்கை வசதி பெற சில மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இது போன்றவர்களுக்கு உடனடியாக உதவும் வகையில் ஆக்சிஜன் வசதி உள்ள பேருந்து மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் பேருந்தில் காற்றிலிருந்து ஆக்சிஜனை செறிவூட்டித் தரும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் ஆக்சிஜனை பெற்று நோயாளிகள் ஆசுவாசம் அடையலாம். திருப்பூரில் உள்ள யங் இந்தியன்ஸ், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தி தந்துள்ளனர். 

இப்பேருந்தில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் செலுத்தும் அளவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் , 24 மணி நேரமும் இதனை பயன்படுத்த முடியும் எனவும் இதனை ஏற்பாடு செய்துள்ள மருத்துவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். இந்த ஏற்பாடு மாவட்டம் முழுவதும் உள்ள பிற அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.