கொரோனா வைரஸ்

உலகை அச்சுறுத்தும் அடுத்த கொரோனா திரிபுக்கு ‘ஓமிக்ரான்’ என பெயரிட்ட உலக சுகாதார நிறுவனம்

நிவேதா ஜெகராஜா

கொரோனாவின் மற்றொரு திரிபொன்று தென் ஆப்ரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் கண்டறியப்பட்டிருந்தது. இதுவரை வந்த திரிபுகளில், இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் கணித்துவந்த நிலையில், இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

முன்னதாக இந்த புதிய கொரோனா திரிபு, ‘பி.1.1.529’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் இதற்கு இன்று கிரேக்க குறியீட்டு பெயரொன்று வழங்கப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் ‘ஒமிக்ரான்’ என்றால் ‘சிறிய’ என்று அர்த்தமாம். இந்த புதிய திரிபு, மிக அதிகமாகவும் வேகமாகவும் பன்மடங்காக பெருகும், பிறழ்வும் தன்மையோடு இருப்பதாக இதை கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதை குறிப்பிட்டு, உலக சுகாதார நிறுவனத்தினர் இந்த புதிய திரபை ‘கவலை கொள்ள வேண்டிய திரிபு’ (Variant of Concern) என்று வகைப்படுத்தியுள்ளனர்.

மிகவும் தீவிரமான பிறழ்வுகளை கொண்டுள்ளதாக கூறப்படும் இந்த ‘ஓமிக்ரான்’ திரிபு, டெல்டா திரிபை போல உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பது, வரும்நாள்களில்தான் தெரியவரும். உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24-ம் தேதி இந்த திரிபு குறித்து தென் ஆப்ரிக்கா ரிப்போர்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.