கொரோனா வைரஸ்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புனேவில் இரவில் பொது மக்கள் நடமாட தடை

Veeramani

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புனேவில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபடுவோர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புனே நிர்வாகம் தெரிவித்தது.

 "அதிகரித்து வரும் COVID-19 வழக்குகளை கருத்தில் கொண்டு, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவதைத் தவிர வேறு எந்த பொது இயக்கமும் அனுமதிக்கப்படாது" என்று புனே ஆணையர் தெரிவித்தார். மேலும் பிப்ரவரி 28 வரை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்றும், புதிய வழிகாட்டுதல்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு விதர்பா பிராந்தியத்தின் யவத்மால், அமராவதி மற்றும் அகோலா நகரங்கள் ஆகிய மூன்று நகரங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மூன்று நகரங்களின் நிர்வாகிகளுடன், அங்குள்ள கோவிட் -19 நிலைமை குறித்து ஒரு சந்திப்பை நடத்தினார்.  “மக்கள் முறையாக COVID-19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காவிட்டால், அவர்கள் புதிய சுற்று கடுமையான பொதுமுடக்கத்துக்கு தயாராக இருக்க வேண்டும்என்று உத்தவ் தாக்கரே எச்சரித்திருந்தார். துணை முதல்வர் அஜித் பவார் மாநிலத்தின் நிலைமை ஆபத்தானது என்றும், தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றாதது குறித்தும் கவலை தெரிவித்தார்.