கொரோனா வைரஸ்

கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை: மத்திய அரசு விளக்கம்

webteam

பல மாநிலங்களில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அது சமூகப் பரவலாக மாறவில்லை என மத்திய அரசு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு சமூகப் பரவலை வரையறை செய்யவில்லை. சமூகப் பரவலின் கட்டத்தின் நிலையை வரையறுக்க அதன் உறுப்பு நாடுகளுக்கு வாய்ப்பு அளித்துள்ளதாக  சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

சமூகப் பரவலின் தொடர்பைக் கண்டறிய முடியாதபோது, அது ஒரு நிலையாக வரையறுக்கப்படுகிறது. யாரிடம் இருந்து யாருக்குத் தொற்று ஏற்பட்டது என்பதை அப்போது நாம் சொல்லமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

டெல்லியின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டிய அந்த அதிகாரி, மக்கள் தொகையில் இருபது சதவீதம் மட்டுமே பாதிக்கப்படும்போது,  சமூகப் பரவல் இருப்பதாக  ஒருவர் கூறமுடியாது. கட்டுப்பாட்டு உத்திகள் எவ்வளவு திறம்பட செயல்படுத்தப்படுகின்றன என்பதில் ஒரு தொழில்நுட்ப விவாதம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.