கொரோனா வைரஸ்

கோவாக்சினுக்கு ஒப்புதல் இல்லை – கூடுதல் விவரங்களை கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

Veeramani

கோவாக்சின் தடுப்பூசிக்கு  உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கவில்லை, இது தொடர்பாக கூடுதல் விவரங்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனத்திடம் வல்லுநர்கள் சில விளக்கங்களைக் கேட்டுள்ளதால், உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் தாமதமாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசும், பொதுமக்களும் இந்த ஒப்புதலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர், 24 மணி நேரத்தில் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று நேற்று சுகாதாரத்துறை வட்டாரங்களில் எதிர்பார்ப்பும் நிலவியது. கோவாக்சினுக்கு கிடைக்கும் உலக சுகாதார நிறுவன ஒப்புதல், இந்த தடுப்பூசியை மற்ற நாடுகள் அங்கீகரிக்க அனுமதிக்கும். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் வெளிநாடு செல்லவும் அனுமதிக்கும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சினுக்கான கூடுதல் விளக்கங்கள் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் இது குறித்த தெளிவுபடுத்தல்கள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், தொழில்நுட்ப ரீதியாக அவசரகால பயன்பாட்டு பட்டியல் (EUL) என அறியப்படும் ஒப்புதலைப் பற்றி விவாதிக்க நவம்பர் 3 ஆம் தேதி மீண்டும் தொழில்நுட்பக்குழு கூடும்என்று கூறினார்.