கொரோனா வைரஸ்

இரண்டாவது அலை ஓய்ந்துவிட்டது என மெத்தனம் கூடாது - மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை

EllusamyKarthik

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா தொற்று கண்டறியப்படும் விகிதம் தொடர்ந்து 14 நாட்களாக 5 சதவிகித்திற்கு கீழ் உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர உலக சுகாதார அமைப்பு பாசிட்டிவிட்டி ரேட் எனப்படும் தொற்று கண்டறியும் விகிதம் 5 சதவிகிதத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்ற வரையறையை வகுத்து அளித்துள்ளது. இந்த விகிதம் தேசிய சராசரி அளவில் எட்டப்பட்டுவிட்ட போதிலும் கொரோனா அலை ஓய்ந்து விட்டதாக எண்ணி விடக்கூடாது என்கிறார் ஷிவ்நாடார் பல்கலைக்கழக இயற்கை அறிவியல் பேராசிரியர் நாக சுரேஷ் வீராப்பு.

ஏனெனில் தற்போது டெல்டா பிளஸ் போன்ற புது வகை உருமாற்ற கொரோனா வைரஸ்கள் இந்தியாவில் பரவி வருவதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார். பல மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்படும் விகிதம் 5 சதவிகித்திற்கு மேல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் தொற்று கண்டறியப்படும் விகிதம் 5 சதவிகித்திற்கு கீழ் குறைந்து அது 2 வாரத்திற்கு மேல் நீடித்தால் மட்டுமே 2ஆவது அலை ஓய்ந்து விட்டதாக உறுதிபட கருத முடியும் என டெல்லியை சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் சந்திரகாந்த் லகாரியா கூறியுள்ளார். இதை வேறு பல மருத்துவ நிபுணர்களும் ஆமோதித்துள்ளனர்.