உசிலம்பட்டியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, இரண்டே நாளில் சுமார் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள சூழலில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட எழுமலையில் 3 பேருக்கும், உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் 4 பேர் மற்றும் பேரையூர், சின்னக்கட்டளை, எம்.கல்லுப்பட்டி, அல்லிகுண்டம், துரைச்சாமிபுரம் புதூர், கண்ணனூர், தும்மக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் தலா ஒரு நபர் என நேற்று இரவு முதல் தற்போது வரை இரண்டே நாளில் சுமார் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது.
இவர்களில் கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் மதுரை அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், ஒரு பெண் வேலம்மாள் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு தகரம் மூலம் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளான நபர்கள் சென்று வந்த இடங்களை கண்டறிந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகளை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.