கொரோனா வைரஸ்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி திட்டம் தொடங்கிவைப்பு

Veeramani

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்; பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள் என தெரிவித்தார்.

கொரோனாவால் பெற்றோரை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டத்தை பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் காணொளி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார அட்டையை அவர்  குழந்தைகளுக்கு வழங்கினார்.



குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும்  உதவித்தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத்திட்டத்தின் நோக்கம்.

இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த பல குழந்தைகளின் வாழ்வு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டது  மிகவும் மன வேதனையை அளித்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் அவர்கள் கல்விக்கு உதவி செய்யும் வகையில் மொத்தமாக ரொக்க உதவித்தொகை ஆகியவை மூலம் சிறிது ஆறுதல் ஏற்படுகிறது என்றார்.



தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த குழந்தைகளுடன் மோடி உரையாடினார். காணொளி மூலம் இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பயனாளிகள் இணைந்தனர்.