கொரோனா வைரஸ்

புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு

Sinekadhara

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கடற்கரை மற்றும் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் அதற்கு அனுமதி அளித்திருந்தார்.

இதற்கிடையே, பிரிட்டனிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரோடு பயணித்தவர்களின் விவரங்களை கணக்கெடுத்தபோது, புதுச்சேரியை சேர்ந்த 30 வயது பெண்மணியும் அந்த விமானத்தில், பாதிக்கப்பட்டவருக்கு பக்கத்து இருக்கையிலேயே அமர்ந்து பயணித்தது தெரியவந்தது. எனவே அவர் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், கிரண்பேடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அதில், தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், அங்கிருந்து பலர் புதுச்சேரிக்கு வர வாய்ப்பிருப்பதாகவும், அதனால் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்தால் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.