கொரோனா வைரஸ்

கொரோனா எப்படி பரவுகிறது? -மாணவர்களின் வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி 

கொரோனா எப்படி பரவுகிறது? -மாணவர்களின் வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி 

webteam
கொரோனா நோய் மனிதர்களை எப்படி வேட்டையாடுகிறது என்பதை எளிய முறையில் விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டுள்ளது.  
 
‘விழித்திரு.. விலகி இரு.. வீட்டிலேயே இரு..’ - இன்றையக் காலத்தில் வேதவாக்கு இதுதான். யாரைக் கண்டும் அஞ்சாத மனிதக்குலம் இன்று  வீட்டிற்குள் முடங்கிப் போய் உள்ளது. காரணம்; கொரோனா நோய்த் தொற்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி மட்டுமே ஆகச் சிறந்த மருந்து என மருத்துவ உலகம் எடுத்துரைத்து வருகிறது. 
 
 
ஒருவரிடம் ஏற்படும் இந்தக் கொரோனா நோய்த் தொற்று படிப்படியாக படர்ந்து ஒட்டுமொத்த மனித இனத்திற்கே ஆபத்தாக மாறியுள்ளது என்பதை நிபுணர்கள் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தியுள்ளனர். இந்த நோய்த் தொற்று எப்படி பரவி மனிதர்களை மாய்க்கிறது என்பதைக் காட்சி ரீதியாக சில மாணவர்கள் விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகியது. வட இந்திய மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதனைப் படம்பிடித்துள்ளனர். அவர்கள் அந்த வீடியோவில் செங்கற்களை வரிசையாக நிற்க வைத்து ஒன்றைத் தட்டும் போது அது படிப்படியாகச் சரிந்து விழுவதைப் போல் காட்சிப் பதிவாகியுள்ளது. 
 
 
 
இந்நிலையில் அந்த வீடியோவை பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  அவர், “குழந்தைகள் விளையாடும்போது வாழ்க்கையின் மிகப் பெரிய  பாடத்தைக் கற்பிக்கிறார்கள்” என்று  குறிப்பிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மாணவர் ஒருவர், ‘இந்த கொரோனா நோய் மனிதர்களை எப்படி சாகடிக்கிறது எனத் தெரிந்து கொள்ளுங்கள்’ என விளக்கம் அளிக்கிறார். 
 
இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து,  2.1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டுள்ளது. கூடுதலாக, இது 49,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 11,000 ரீட்வீட்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.